இளைஞர்களை கவர்ந்துள்ள திரைப்படம்
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரவி மோகன், நித்யா மேனன் ஆகியோரின் கியூட்டான நடிப்பும் புதுமையான திரைக்கதையும் பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாக விமர்சனங்கள் வெளிவருகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகத்தில் இருக்கிறது எனவும் பின்னணி இசை திரைப்படத்தின் ஓட்டத்திற்கேற்றவாறு மிகவும் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். முழுக்க முழுக்க இளம் தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 2K கிட்களின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக அவர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காதலிக்க நேரமில்லை படத்தில் நயன்தாரா?
இந்த நிலையில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட போது, இத்திரைப்படத்தின் கதையை பல வருடங்களுக்கும் முன்பு நயன்தாராவிடம் கூறியதாக அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

“ஏன் நயன்தாரா இத்திரைப்படத்தில் நடிக்க வில்லை?” என்று கேள்வி எழுப்பியபோது, “அதன் பின் நான் “பேப்பர் ராக்கெட்” போன்ற அடுத்தடுத்த புராஜெக்ட்டுகளில் பிசியாகிவிட்டேன். ஆதலால்தான் இது சாத்தியப்படவில்லை” என்று கூறினார்.