டாப் நடிகை
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழில் “ஐயா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா “சந்திரமுகி”, “கஜினி” போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக உருவானார். தற்போது தமிழில் “டெஸ்ட்”, “மண்ணாங்கட்டி” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள நயன்தாரா “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இனிமே என்னைய அப்படி கூப்புடாதீங்க…
இந்த நிலையில் நேற்று நயன்தாரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வருகிறீர்கள். இந்த பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று மட்டுமே அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான். ஆனால் சில நேரங்களில் உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கமல்ஹாசன் தனது உலக நாயகன் பட்டத்தை துறந்த நிலையில் தற்போது நயன்தாராவும் தனது பட்டத்தை துறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
