தமிழ் சினிமாவின் கிளாசிக்
1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “நாயகன்” திரைப்படம் தமிழ் சினிமாவின் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை தயாரித்தவர் முக்தா சீனிவாசன். இளையராஜாவின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

அக்காலகட்டத்தில் ஒரு டிரெண்ட் செட்டர் திரைப்படமாக “நாயகன்” அமைந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “நாயகன்” திரைப்படத்தை குறித்த ஒரு அரிய தகவலை பகிர்ந்துகொண்டார்.
டைரக்ட் செய்த 6 இயக்குனர்கள்…
“நாயகன்” திரைப்படம் படமாக்கி முடிக்கப்பட்ட போது கிட்டத்தட்ட 6 மணி நேர நீளம் வந்ததாம். அதன் பின் சில காட்சிகளை நீக்கிப் பார்த்தபோது படம் முழுமையடையாதவாறு இருந்ததாம். இதனால் மௌலி, பஞ்சு அருணாச்சலம் உள்பட 5 பேரை அழைத்து முழு திரைப்படத்தையும் திரையிட்டுக் காட்டி இதில் இருந்து எந்தெந்த காட்சிகளை நீக்கலாம் என அவர்களிடம் கேட்டார்களாம்.

அதன் பின் அவர்கள் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில்தான் இத்திரைப்படம் எடிட் செய்யப்பட்டதாம். இவ்வாறு “நாயகன்” என்ற கிளாசிக் திரைப்படத்திற்கு பின்னால் பலரின் கை இருந்திருக்கிறது.