சிவகார்த்திகேயனின் பராசக்தி…
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. இத்திரைப்படம் ஹிந்தி திணிப்பை எதிர்த்து கிளர்ந்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்த “பராசக்தி” திரைப்படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். சிவாஜி கணேசனின் குடும்பத்திடம் முறையான அனுமதி வாங்கியே “பராசக்தி” என்று டைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பு நிறுவனம்?
எனினும் சிவாஜி கணேசன் நடித்த “பராசக்தி” திரைப்படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “பராசக்தி திரைப்படத்தின் டைட்டில் எங்களுக்கே உரிமையானது. வேறு எவரும் பராசக்தி படத்தின் டைட்டிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

சிவாஜி கணேசனின் “பராசக்தி” திரைப்படம் வெள்ளிவிழா காண உள்ளதை முன்னிட்டு இத்திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதால் நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.