கவியரசர்
கவியரசர் கண்ணதாசன் தமிழ் சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற பாடலாசிரியர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவர். அவர் பாடலாசிரியர் மட்டுமல்லாது அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட.

“மாலை இட்ட மங்கை”,”சிவகங்கை சீமை”, “கவலை இல்லாத மனிதன்” போன்ற பல திரைப்படங்களை கண்ணதாசன் தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் கண்ணதாசன் “மாலை இட்ட மங்கை” திரைப்படத்தை தயாரிக்கத் தொடங்கியபோது அவருக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
மரியாதை இல்லாமல் நடந்துகொண்ட நடிகர்
கண்ணதாசன் தயாரித்த “மாலை இட்ட மங்கை” திரைப்படம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் டி.ஆர்.மகாலிங்கம். ஆனால் இத்திரைப்படம் தொடங்கப்பட்டபோது இதில் பிரபல தெலுங்கு நடிகரான நாகேஸ்வர ராவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று கண்ணதாசன் நினைத்தாராம்.
அதன்படி அவரை ஒப்பந்தம் செய்ய கண்ணதாசன் சந்தித்தபோது, நாகேஸ்வர ராவ் கண்ணதாசனிடம் நடந்துகொண்ட முறையே சரியாக இல்லையாம். நாகேஸ்வர ராவ் பெரும்பாலும் இப்படித்தான் நடந்துகொள்வாராம்.

என்.டி.ராமாராவ் மிகவும் கண்ணியமான நடிகராம். ஆனால் “மாலையிட்ட மங்கை” திரைப்படத்திற்கு என்.டி.ஆர் சரியாக பொருந்தமாட்டார் என்பதற்காக கண்ணதாசன் அவரை அணுகவில்லையாம். அதன் பிறகுதான் நன்றாக பாடக்கூடிய திறன் படைத்த டி.ஆர்.மகாலிங்கத்தை அணுகினாராம் கண்ணதாசன். அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.