சர்ச்சை இயக்குனர்
மிஷ்கினின் திரைப்படங்களில் சர்ச்சை இருக்குமோ இல்லையோ, அவர் பொதுமேடைகளில் பேசும்போது சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஒரு வழக்கமாகவே இருக்கிறது. “துப்பறிவாளன் 2” திரைப்பட விவகாரத்தின்போது ஒரு விழாவில் விஷாலை குறிப்பிட்டு, “பொறுக்கி சார் அவன், உனக்கு என்னடா தெரியும்?” என பேசியதில் இருந்து தொடங்கியது இந்த வழக்கம். அதன் பின் பல சினிமா விழாக்களில் பல எடக்கு மடக்கான விஷயங்களை பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்.

மீண்டும் ஒரு சர்ச்சை?
இந்த நிலையில் “பாட்டல் ராதா” என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் மிஷ்கின். அப்போது பேசிய அவர், “ஒரு லட்சணமான பெண், சமூக வலைத்தளத்தில் ஒரு கேவலமான பாடலுக்கு உதட்டை கடித்துக்கொண்டு ரீல்ஸ் போடுகிறாள். இதை விட கேவலமான ஒரு Addiction இந்த சமூகத்திற்கு இருக்கிறதா?” என்று ஆதங்கபட்டார்.
மேலும் பேசிய அவர், “என்னுடைய மனைவியினுடைய தந்தையார் பகலில் நன்றாக இருப்பார். மாலை ஆனவுடன் குடித்துவிட்டு கத்த தொடங்குவார். ஆனால் என்னிடம் அவரால் வம்பு வைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நான் அவரை விட பெரிய குடிகாரன். நான் அவரை செஞ்சிவிட்டுவிடுவேன்.

நான் ஒரு பெரும் குடிகாரன். ஆனால் எனக்கு அதை விட மிகப்பெரிய போதை ஒன்று இருக்கிறது. அது சினிமா” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“பாட்டல் ராதா” திரைப்படம் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இதில் குரு சோமசுந்தரம், சாஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக ரஞ்சித் வெளியிடுகிறார். இத்திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளிவர உள்ளது.