நயன்தாரா-சுந்தர் சி கூட்டணி
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “மூக்குத்தி அம்மன்”. இத்திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்திற்கான பிரம்மாண்ட பூஜை நடைபெற்றது. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். இதில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ள நிலையில் இவருடன் சுந்தர் சி, ஊர்வசி, துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, மீனா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் பொள்ளாச்சியில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
100 கோடிக்கும் மேல போயிடுச்சு..
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பட்ஜெட்டை குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் தொடங்கப்படுவதற்கான டிஸ்கஷன் தொடங்கப்பட்டபோது ரூ.55 கோடிதான் இத்திரைப்படத்திற்கான பட்ஜெட்டாக முடிவு செய்யப்பட்டதாம்.

ஆனால் நயன்தாரா உட்பட பல முக்கிய நடிகர் நடிகைகள் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையிலும் இத்திரைபடத்தை பேன் இந்தியா திரைப்படமாக உருவாக்கும் முயற்சியிலும் இத்திரைப்படத்தின் பட்ஜெட் தற்போது ரூ.112 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாம். இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ், குஷ்பு, நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.