அகில உலக சூப்பர் ஸ்டார்
ரேடியோ மிர்ச்சி நிறுவனத்தில் RJ ஆக பணிபுரிந்தவர் சிவா. அதன் காரணமாக இவருக்கு மிர்ச்சி சிவா என்று பெயர் வந்தது. இவர் RJ ஆக பணிபுரிந்தபோதே வானொலி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து “12 B”, “ஆளவந்தான்”, “விசில்” போன்ற பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த சிவா, “சென்னை 28” திரைப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவர் நடித்த “தமிழ்ப் படம்” இவரது கெரியரில் முக்கிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. பல பிரபலமான தமிழ் திரைப்படங்களை Spoof செய்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு “அகில உலக சூப்பர் ஸ்டார்”? என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் நடித்த திரைப்படம் தோல்வியடைந்த காரணத்தினால் சினிமாவே வேண்டாம் என்று மறுபடியும் RJ ஆக போய்விட்ட சம்பவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அந்த படம் அவ்வளவு எதிர்பார்த்தோம், ஆனால்?
மிர்ச்சி சிவா, எஸ்.பி.சரண், லேகா வாசிங்க்டன் ஆகியோரின் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “வ”. இத்திரைப்படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கியிருந்தனர். இத்திரைப்படம் வெளிவந்தபோது ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பே இருந்தது. அந்த வகையில் அப்பேட்டியில் பேசிய மிர்ச்சி சிவா, “வ குவாட்டர் கட்டிங் திரைப்படம் மிகவும் இன்ட்ரஸ்டிங்கான கதைக்களம் கொண்ட திரைப்படம்.

பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் படப்பிடிப்பு இருக்கும் என்பதால் தூங்காமல் மிகவும் கடினமாக உழைத்தோம். ஆனால் அந்த படம் யாருக்கும் பிடிக்கவில்லை. இனிமே நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்து திரும்பவும் ரேடியோவுக்கே போய்விட்டேன். அதன் பின்புதான் சுந்தர் சி கலகலப்பு கதையை என்னிடம் வந்து கூறினார்” என்று அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.