எம்.ஜி.ஆருக்கு நடந்த துயரம்
புரட்சி தலைவர் என்று புகழப்படும் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் “ராஜகுமாரி”. ஆனால் அவர் முதன்முதலில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானது “சாயா” என்ற திரைப்படத்தில்தான். துர்திஷ்டவசமாக “சாயா” திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுப்போனது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கு நேர்ந்த பல சிக்கல்கள் அவரை துயரத்திற்குள் தள்ளியது.

முதல் பட வாய்ப்பு
“சாயா” பட படப்பிடிப்பு பாதியில் நின்றதை தொடர்ந்து மீண்டும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். அதன் பின் ஒரு நாள் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.ஜி.ஆரை வந்து சந்தித்து, “ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கப்போகும் ராஜகுமாரி திரைப்படத்தில் நீதான் கதாநாயகனாக நடிக்கப்போகிறாய். இயக்குனர் முடிவு செய்துவிட்டார்” என்று கூறினார்.
ஆனால் எம்.ஜி.ஆரின் முகத்தில் எந்த சலனமும் இல்லையாம். அதற்கு முன்பு தான் கதாநாயகனாக நடித்த “சாயா” திரைப்படம் பாதியிலேயே நின்றுப்போனதால் எஸ்.எம்.சுப்பையா நாயுடு கூறிய செய்தியை அவர் நம்பவே இல்லை. எம்.ஜி.ஆரின் முகத்தில் எந்த வித சலனமும் இல்லாததை புரிந்துகொண்ட எஸ்.எம்.சுப்பையா நாயுடு, “வேண்டுமென்றால் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் நீயே சென்று கேட்டுப்பார்” என்று கூறினாராம்.

அதன்படி எம்.ஜி.ஆர். நேராக இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமியை சந்தித்து கேட்டுள்ளார். ஏ.எஸ்.ஏ.சாமி, “ஆமாம்” என்று கூற அதன் பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு நம்பிக்கையே வந்ததாம்.
“ராஜகுமாரி” திரைப்படத்தை தயாரித்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் அத்திரைப்படத்தில் முதலில் தியாகராஜ பாகவதரை ஹீரோவாக நடிக்க வைப்பதாக முடிவு செய்திருந்தது. தியாகராஜ பாகவதர் அந்த சமயத்தில் சினிமா திரையுலகில் சூப்பர் ஸ்டாக திகழ்ந்தவர். எனினும் ஏ.எல்.ஏ.சாமி இந்த படத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தாராம்.