எம்.ஜி.ஆர் VS நம்பியார்…
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் அவருக்கு நிகரான வில்லன் நடிகராக பார்க்கப்பட்டவர் நம்பியார். எம்.ஜி.ஆருக்கு ஈடான வில்லன் நம்பியார்தான் என ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது. சில சமயங்களில் நம்பியார் பொது மக்களை சந்திக்கும்போது “எம்.ஜி.ஆரை அடிக்குற அளவுக்கு உனக்கு திமிரா?” என ரசிகர்கள் கேட்பார்களாம். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் VS நம்பியார் என்பது ரசிகர்கள் ரசித்து பார்க்கும் ஹீரோ-வில்லன் கதாபாத்திரங்களாக அமைந்திருந்தது.

இருவருக்கும் இடையே உள்ள நட்பு…
இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே உள்ள நட்பை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
“எம்.ஜி.ஆரும் நம்பியாரும் திரைப்படங்களில் எதிரிகளாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்தார்கள். நம்பியாரை பொறுத்தவரை அவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்றுதான் கூறவேண்டும். எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட செல்வாக்கு உள்ளவர் என்பது பலரும் தெரியும்.

அப்படிப்பட்ட செல்வாக்குள்ள எம்.ஜி.ஆர் ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். ஏறத்தாழ 11 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டார். அப்படிப்பட்ட காலகட்டத்தில் கூட தனக்கென ஒரு உதவி கேட்டு நம்பியார் எம்.ஜி.ஆரை அணுகியதே இல்லை. இது போன்றுதான் அவர்களது நட்பு தூய நட்பாக இருந்தது” என எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே உள்ள நட்பை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.