இளம் கதாநாயகன்
தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் மணிகண்டன். “காலா”, “ஜெய் பீம்” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான மணிகண்டன், “குட் நைட்” திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக உருவாகியுள்ளார்.

அதனை தொடர்ந்து “லவ்வர்” திரைப்படத்தில் நடித்த மணிகண்டன் தற்போது “குடும்பஸ்தன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
என்னை அடிமையாக நடத்திய இயக்குனர்
இந்த நிலையில் சமீபத்தில் சாய் வித் சித்ரா பேட்டியில் கலந்துகொண்ட மணிகண்டன், தன்னை அடிமையாக நடத்திய இயக்குனர் குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். “நான் ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது அவர் என்னை பயன்படுத்திய விதம் மிகவும் மோசமாக இருந்தது. பொதுவெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அவர் என்னை மிகவும் பயங்கரமாக கொடுமைப்படுத்தினார்.

ஒரு நாள் அவருடைய மொபைலை காணவில்லை. அவரது மொபைலை கண்டுபிடிக்க எனது மொபைலில் இருந்து அவரது நம்பருக்கு ஃபோன் செய்தபோது ஒரு சோஃபாவின் இடுக்கில் அவரது மொபைல் சிக்கி இருந்தது தெரியவந்தது. அவரது மொபைலை நான் எடுக்கப்போகும்போது அவர் என்னை வந்து தடுக்க முயன்றார். ஆனால் அதற்குள் அவரது மொபைலை நான் எடுத்துவிட்டேன். அதில் என்னுடைய நம்பரை அடிமை நம்பர் 1 என்று பதிவு செய்திருந்தார். நான் அதனை பார்த்துவிட்டேன் என்று அவருக்கு தெரிந்ததும் “சும்மா காமெடிக்கு அப்படி Save பண்ணிருக்கேன்” என்று கூறி சமாளித்தார். அதன் பின் நான் அவரிடம் இருந்து வெளியே வந்துவிட்டேன்” என அப்பேட்டியில் மணிகண்டன் மனம் உடைந்து பகிர்ந்துகொண்டுள்ளார்.