இளம் கதாநாயகன்
தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகனாக வலம் வரும் மணிகண்டன், மிகச் சிறந்த மிமிக்ரி கலைஞரும் கூட. பல நடிகர்களின் குரலை பல வகைகளில் பேசுவதில் கில்லாடி இவர். இவர் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தான் நடித்த “குடும்பஸ்தன்” திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிகண்டன், தான் பின்னணி குரல் கொடுத்த திரைப்படங்களை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

லிஸ்ட் பெருசா இருக்கே!
“இந்தியன் 2” திரைப்படத்திற்காக விவேக், மனோபாலா ஆகிய இருவருக்கும் மணிகண்டன் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். மேலும் “வேட்டையன்” திரைப்படத்திற்காக அமிதாப் பச்சனுக்கு பல காட்சிகளில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

அதே போல் “GOAT” திரைப்படத்தில் விஜயகாந்த் குரலாக இருந்திருக்கிறார். மேலும் “விடுதலை” திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு மணிகண்டன் சில காட்சிகளில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதி பிசியாக இருக்கும் நேரங்களில் இவர் அவருடைய அனுமதியுடன் டப்பிங்கில் பேசுவாராம். கிட்டத்தட்ட 12 திரைப்படங்களில் விஜய் சேதுபதிக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறாராம் இவர். மற்றபடி கிரெடிட் கொடுக்காத திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன எனவும் கூறியுள்ளார்.