மன்மதன்
2004 ஆம் ஆண்டு சிம்பு, ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் முருகன் என்பவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “மன்மதன்”. இதில் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதில் சிம்பு ஏற்று நடித்திருந்த மொட்டை மதன் என்ற கதாபாத்திரம் மிகப் பிரபலமான கதாபாத்திரமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் டைட்டில் கார்டில் இயக்குனருக்கு கீழ் முருகன் என்ற பெயர் இடம்பெற்றிருந்தாலும் இத்திரைப்படத்தை சிம்புவே இயக்கியதாக கூறப்படுகிறது.

சம்பளம் வாங்காமல் நடித்த பாலிவுட் நடிகை…
இந்த நிலையில் “மன்மதன்” திரைப்படத்தில் பாலிவுட் நடிகை மந்த்ரா பேடியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாராம் சிம்பு. ஆனால் மந்த்ரா பேடி தமிழ் சினிமாவில் எல்லாம் நடிக்க மாட்டார் என்ற பேச்சு அந்த சமயத்தில் எழுந்தது. எனினும் போய் பேசிப் பார்க்கலாமே என்று மும்பைக்கு கிளம்பினாராம் சிம்பு.

மந்த்ரா பேடியிடம் கேட்டபோது அவர் உடனே நடிப்பதற்கு ஒப்புக்கொண்டாராம். மந்த்ரா பேடிக்கு படத்தின் துவக்கத்தில் சில காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்த காட்சிகளை படமாக்கிய பிறகு மந்த்ரா பேடி ஒரு பாடல் காட்சியில் இடம்பெற்றால் நன்றாக இருக்குமே என நினைத்தாராம் சிம்பு.
தனது மனதில் நினைத்ததை சிம்பு மந்த்ரா பேடியிடம் வெளிப்படையாக கூற, மந்த்ரா பேடியும் ஒப்புக்கொண்டாராம். மேலும் அந்த பாடல் காட்சியில் நடிக்க அவர் சம்பளமே வாங்கவில்லையாம்.