12 வருடம் கிடப்பில் கிடந்த படம்
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு உருவான “மதகஜராஜா” திரைப்படம் பொருளாதார சிக்கலில் சிக்குண்டதால் பல வருடங்களாக வெளிவராமல் இருந்தது. இத்திரைப்படம் எப்போது வெளிவரும்? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்து ஒரு கட்டத்தில் இத்திரைப்படத்தை ரசிகர்கள் மறந்தே போயினர்.

எனினும் அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளிவராத நிலையில் திடீரென “மதகஜராஜா” திரைப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கடிக்க வைத்தது. அந்த வகையில் நேற்று “மதகஜராஜா” திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தது.
பழைய Form சந்தானத்தை கொண்டாடும் ரசிகர்கள்!
“மதகஜராஜா” திரைப்படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார். அக்காலகட்டத்தில் சந்தானம் காமெடி நடிகராக உச்சத்தில் இருந்த சமயம். அதன் பின் அவர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடியனாக நடிப்பதை குறைத்துக்கொண்டு ஒரு கட்டத்தில் முழு நேர ஹீரோவாக உருவெடுத்தார்.
இந்த நிலையில்தான் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்துள்ளது. அத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், “சந்தானம் காமெடியில் பிச்சி உதறிவிட்டார்” என பாராட்டி வருகின்றனர். அதே போல் சுந்தர் சியின் கலகலப்பான திரைக்கதையும் ஒர்க்கவுட் ஆகி இருப்பதாக கூறுகின்றனர். இந்த பொங்கல் தினத்தன்று “விடாமுயற்சி” வராத குறையை “மதகஜராஜா” தீர்த்துள்ளதாக கூட சில ரசிகர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு 12 வருடங்கள் கிடப்பில் கிடந்த திரைப்படம் இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிவந்தும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது தமிழ் சினிமாத்துறையினரை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.