கிடப்பில் கிடந்த படம்
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் “மதகஜராஜா”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவர் விலக “கோ” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திகா அக்கதாபாத்திரத்தில் நடித்தார்.

சில காரணங்களால் அவரும் விலக, டாப்ஸி இத்திரைப்படத்தில் ஒப்பந்தமானார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரும் விலக அதன் பின் வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமானார். இவ்வாறு பல பிரச்சனைகளை தாண்டி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2013 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் இத்தனை ஆண்டுகளாக வெளிவராமல் கிடப்பில் கிடந்தது. பல பேட்டிகளில் கூட சுந்தர் சியிடம் “மதகஜராஜா திரைப்படம் எப்போது வெளிவரும்?” என பலரும் கேட்டிருக்கின்றனர். ஆனால் தெளிவான பதிலை அவரும் கூறியதில்லை. ஆதலால் இத்திரைப்படம் வெளியாகும் என்ற நம்பிக்கையே ரசிகர்களுக்கு இல்லாமல் போனது.
பொங்கல் ரிலீஸ்
இந்த நிலையில் திடீரென இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதாவது வருகிற 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. “விடாமுயற்சி” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போன நிலையில் “மதகஜராஜா” திரைப்படமும் பொங்கல் ரேஸில் மோத உள்ளது.
