கேம் சேஞ்சர்
இயக்குனர் ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் “கேம் சேஞ்சர்”. இதில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். எஸ்.தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஷங்கருக்கு ரெட் கார்ட்
இயக்குனர் ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்த “இந்தியன் 2” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிலையில் “இந்தியன் 3” திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இன்னும் 80 கோடிகள் தேவைப்படுவதாக ஷங்கர் கூறியிருக்கிறார். இதில் ஷங்கரின் 30 கோடி சம்பளமும் அடங்குமாம்.

ஆனால் லைகா நிறுவனமோ, திரைப்படத்தை முடிப்பதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் செலவு பண்ண முடியுமே தவிர சம்பளம் கொடுக்க முடியாது, ஏனென்றால் “இந்தியன் 2” திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சம்பளம் வாங்காமல் “இந்தியன் 3” திரைப்படத்தை முடித்து கொடுக்குமாறு ஷங்கரிடம் கண்டிஷன் போட்டுள்ளனர். அதே போல் “இந்தியன் 3” திரைப்படத்தை இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை திரையிட்டு காட்டுமாறு ஷங்கரிடம் லைகா நிறுவனம் கேட்டுள்ளதாம். ஆனால் ஷங்கர் இந்த இரண்டு கண்டிஷனுக்கும் மறுப்பு தெரிவித்து விட்டாராம். ஆதலால் இந்த விவகாரத்திற்கு முடிவு தெரிய வரும்வரை “கேம் சேஞ்சர்” திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் ரெட் கார்ட் போட வேண்டும் என்று தயாரிப்பு சங்கத்திடம் லைகா நிறுவனம் முறையிட உள்ளார்களாம்.