ரசனைக்குரிய திரைப்படம்… ஆனால்?
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “உத்தம வில்லன்”. இத்திரைப்படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து லிங்குசாமியும் அவரது சகோதரர்களும் தயாரித்திருந்தார்கள். இத்திரைப்படம் கலைரசனையான திரைப்படம் என்று பலராலும் கொண்டாடப்பட்டாலும் இத்திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியை கண்டது.

ஆதலால் லிங்குசாமிக்கு இதில் மன வருத்தம் அதிகமாகவே இருந்தது. அது மட்டுமல்லாது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பொருளாதார சிக்கலும் ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட லிங்குசாமி, “உத்தம வில்லன்” திரைப்படத்தை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
எவ்வளவோ சொன்னேன், ஆனால்…
“கமல் முதலில் ஒரு கதை சொன்னார். நல்ல கமெர்சியலான கதை. ஆனால் அவர் வாரத்திற்கு ஒரு கதை மாற்றிக்கொண்டிருந்தார். அதுதான் சிக்கல். திடீரென்று உத்தம வில்லன் கதையை திரைப்படமாக எடுக்கலாம் என்றார். இந்த படம் எடுத்துமுடித்த பிறகு படத்தில் எதுவும் பிரச்சனை என்றால் கூறுங்கள் என என்னிடம் சொல்லியிருந்தார்.

நான் எதிலும் தலையிடமாட்டேன், ஆனால் படம் பார்த்துவிட்டு கரெக்சன் சொல்லுவேன், அப்போது நீங்கள் மாற்றினால் போதும் என கூறினேன். படம் பார்த்தபிறகு எதை எதை எல்லாம் படத்தில் மாற்றலாம் என்று ஒரு பட்டியல் போட்டு எடுத்து சென்றேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாற்றுகிறேன் என கூறினார். ஆனால் மாற்றவில்லை. அந்த மாற்றங்களை மட்டும் அவர் செய்திருந்தால் படம் வெற்றிப்படமாக ஆகியிருக்கும்” என லிங்குசாமி அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.