தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வெற்றி
கிச்சா சுதிப் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “மேக்ஸ்”. இத்திரைப்படத்தை விஜய் கார்த்திகேயா என்பவர் இயக்க கலைப்புலி எஸ் தாணு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு இரவுக்குள் ஒரு காவல் நிலையத்தில் நடைபெறும் சம்பவங்களே இத்திரைப்படத்தின் கதையாக அமைந்திருந்தது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது.

நான் ஈ நடிச்சதுக்கு இதான் காரணம்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நானி, சமந்தா, கிச்சா சுதிப் உள்ளிட்ட பலரது நடிப்பில் 2012 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் “ஈகா”. இத்திரைப்படம் அதே வேளையில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு “நான் ஈ” என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கிச்சா சுதிப்பிடம் நிருபர், “இப்போதும் நீங்கள் நான் ஈ மாதிரியான திரைப்படத்தில் நடிப்பீர்களா?” என கேட்டார்.

அதற்கு பதிலளித்த கிச்சா சுதிப், “இயக்குனர் ராஜமௌலி நான் ஈ திரைப்படத்தின் கதையை என்னிடம் கூறியபோது, இரண்டு பேர் காதலிக்கிறார்கள், உங்களுக்கு அந்த பெண்ணை பிடித்துவிடுகிறது, அந்த பையனை நீங்கள் கொன்றுவிடுகிறீர்கள், அந்த பையன் ஈ ஆக வந்து உங்களை பழிவாங்குகிறான் என கூறினார். அதை கேட்டபோது எனக்கு Batman திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது. Batman முகமூடிக்கு பின்னால் யார் இருக்கிறார் என்பது முக்கியமில்லை, என்னுடைய கவனம் ஜோக்கர் கதாபாத்திரத்தின் மீதுதான். ஆதலால்தான் நான் ஈ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என கூறினார். தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.