கவியரசர்
தமிழ் சினிமாவில் 5000க்கும் மேற்பட்ட கிளாசிக் பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். தமிழும் தமிழ் சினிமாவும் உள்ள வரை காலம் கடந்து கண்ணதாசனின் புகழ் நிலைத்து நிற்கும். அந்தளவிற்கு தமிழ் சினிமா இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவராக கண்ணதாசன் திகழ்ந்துள்ளார். இந்த நிலையில் கண்ணதாசன் எழுதிய மிகப் பிரபலமான ஒரு பாடலை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை இப்போது பார்க்கலாம்.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை….
1961 ஆம் ஆண்டு பீம் சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, ஜெமினி கணேசன், சாவித்திரி உட்பட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பாவ மன்னிப்பு”. இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைக்க அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருந்தார்.
இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சைக்கிள் ஓட்டிக்கொண்டே பாடுவது போல் படமாக்கப்பட்ட “வந்த நாள் முதல் இந்த நாள் வரை” என்ற பாடல் மிகப் பிரபலமான பாடலாக அமைந்தது. இந்த பாடலை ஒரு ஹிந்தி பாடல் வரிகளை கேட்டதை வைத்துதான் எழுதினாராம் கண்ணதாசன்.

அதாவது கண்ணதாசன் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பாடலாசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தபோது “கித்னா பாதல் கயா இன்சான்” என்ற ஹிந்தி திரைப்படத்தை படமாக்கிக்கொண்டிருந்தார்களாம். அந்த ஹிந்தி படத்திற்கு பிரதீப் என்ற ஹிந்தி கவிஞர் பாடலாசிரியராக பணியாற்றினார்.
அந்த ஹிந்தி கவிஞரான பிரதீப் அந்த ஹிந்தி திரைப்படத்தின் டைட்டிலான “கித்னா பாதல் கயா இன்சான்” என்ற வரிகளால் தொடங்கும் ஒரு பாடலையும் எழுதினார். அந்த பாடலின் விளக்கத்தையும் பொருளையும் ஹிந்தி கவிஞர் பிரதீப் கண்ணதாசனிடம் கூறினாராம். அந்த பாடலின் விளக்கம் கண்ணதாசனுக்கு பிடித்துப்போக, அந்த ஹிந்தி பாடலின் பொருளை வைத்து ஒரு பாடலை “பாவ மன்னிப்பு” திரைப்படத்தில் எழுத வேண்டும் என நினைத்தாராம். அவ்வாறு அவர் எழுதிய பாடல்தான் “வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை….” என்ற பாடல்.