களத்தூர் கண்ணம்மா
உலக நாயகனாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன், தனது 5 வயதில் “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பால்ய வயதில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த கமல்ஹாசன், அதன் பின் உலக நாயகனாக உருமாறியதெல்லாம் வரலாறு.

முதல் படம் ஹீரோவாக…
கமல்ஹாசன் தமிழின் முன்னணி நடிகர் என்றாலும் அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கமல்ஹாசனை முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமா இல்லை. ஆம்!

அதாவது 1974 ஆம் ஆண்டு “கன்யாகுமரி” என்ற மலையாளத் திரைப்படத்தில்தான் கமல்ஹாசன் கதாநாயகனாக அறிமுகமானார். அத்திரைப்படத்தை கே.எஸ்.சேதுமாதவன் என்பவர் இயக்க மலையாள இலக்கிய பிதாமகரான எம்.டி.வாசுதேவன் நாயர் இத்திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியுள்ளார். ஆதலால் கமல்ஹாசனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய பெருமையை மலையாள சினிமாத்துறையையே சேரும் என்பது கண்கூடு.