குடும்பங்கள் கொண்டாடும் நாயகன்
“ஜெயம்” திரைப்படத்தின் மூலம் ஜெயம் ரவியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட இவர், குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகனாக வலம் வருகிறார். அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இவ்வாறு சிறியவர் முதல் பெரியவர் வரை தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் நிலையான இடத்தை பிடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

பெயர் மாற்றம்!
இந்த நிலையில் ஜெயம் ரவி திடீரென தனது பெயரை மாற்றியுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த நாள் தொடங்கி இனி நான் ரவி/ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச்செல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார். கூடுதலாக இந்த சமூகத்திற்கு அவரால் முடிந்த உதவிகளை செய்ய அவரது ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் “ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளை” என மாற்றப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.