புரட்சி தலைவி
ஒரு நடிகையாக மட்டுமல்லாது தமிழகத்தின் சிறந்த முதல்வராகவும் மக்களின் மத்தியில் நிலைத்திருப்பவர் ஜெயலலிதா. இந்திரா காந்திக்கு பிறகு இரும்பு பெண்மணி என்று பெயர் எடுத்த ஜெயலலிதா புரட்சித் தலைவி என்ற பட்டத்திற்கும் சொந்தக்காரர் ஆனார்.
மாஸ்டர் சுந்தரம்

ஜெயலலிதா நடிக்க வந்த புதிதில் நடன இயக்குனர் தங்கப்பன் ஜெயலலிதாவின் பல திரைப்படங்களுக்கு நடன் இயக்குனராக இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தங்கப்பனிடம் உதவியாளராக பிரபு தேவாவின் தந்தை சுந்தரம் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆதலால் ஜெயலலிதாவுக்கு சுந்தரம் மாஸ்டர் பல நடன நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
ரோட்டில் நின்ற மாஸ்டர்
இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரம் மாஸ்டர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று தனது சொந்த ஊரான மைசூருக்கு சென்றுவிட்டார். இப்போது ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சர். இந்த சமயத்தில் ஒரு நாள் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் தரிசனம் செய்ய சென்றிருந்தார் ஜெயலலிதா. அதை கேள்விப்பட்ட சுந்தரம் மாஸ்டர், ஜெயலலிதாவிற்கு ஒரு பூங்கொத்து கொடுக்க முடிவெடுத்து கையில் பூங்கொத்துடன் சாமுண்டீஸ்வரி கோயில் செல்லும் சாலையில் ஜெயலலிதாவிற்காக காத்துக்கொண்டிருந்தார்.

தன்னை ஜெயலலிதா கவனித்தால் மட்டுமே இந்த பூங்கொத்தை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் கொடுக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தார் சுந்தரம். சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் தரிசித்து முடித்தவுடன் பெங்களுருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த சுந்தரம் மாஸ்டரை அடையாளம் கண்டுகொண்டு காரில் இருந்து இறங்கி அவர் கொண்டு வந்திருந்த பூங்கொத்தையும் பெற்றுக்கொண்டார். “எவ்வளவு பெரிய ஆளானாலும் தொடக்க காலகட்டத்தில் பழகியவர்களை அவர் மறக்கவில்லை” என்று இந்த சம்பவத்தை குறித்து ஜெயலலிதாவை பின்னாளில் ஒரு பேட்டியில் புகழ்ந்துள்ளார் சுந்தரம் மாஸ்டர்.