எம்.ஜி.ஆருக்கு இருந்த மரியாதை
எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருமாறிய பிறகு அவரது செல்வாக்கு மிகப்பெரிய அளவில் இருந்தது. அவர் படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தாலே அனைவரும் எழுந்து நிற்பார்கள். அந்தளவுக்கு அவர் மீது மரியாதை இருந்தது. ஆனால் ஜெயலலிதா மட்டும் எம்.ஜி.ஆர் வரும்போது எழுந்து நிற்க மறுத்தாராம். இந்த சம்பவத்தை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஆயிரத்தில் ஒருவன்
ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அறிமுகமான திரைப்படம் “வெண்ணிற ஆடை”. இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருடன் நடித்த திரைப்படம்தான் “ஆயிரத்தில் ஒருவன்”. இத்திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது, எம்.ஜி.ஆர் படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்றார்களாம்.
ஆனால் ஜெயலலிதா மட்டும் எழுந்து நிற்கவில்லையாம். இது எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடிக்கும் முதல் படம் என்பதால் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் உள்ளே நுழையும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது தெரியவில்லை என்று அத்திரைப்படத்தின் இயக்குனர் பி.ஆர்.பந்தலுக்கு தோன்றியதாம்.

உடனே ஜெயலலிதாவின் அருகினில் வந்து அவரது காதுகளில், “இவர்தான் இந்த படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். எழுந்து நில்லுங்கள்” என்று மெதுவாக கூறியிருக்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, “அவரும் நடிகர் நானும் நடிகர். ஏன் எழுந்து நிற்க வேண்டும். ஒரு வேளை அவர் எனது அருகில் வந்து பேசினால் நான் எழுந்து நின்று பேசுகிறேன்” என்று பதில் கூறினாராம்.
ஜெயலலிதா இவ்வாறு பேசிய செய்தி எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது. அனைவரும் அடுத்த நாள் இந்த படத்தில் இருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டுவிடுவார் என்று எண்ணினார்களாம். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவின் தன்னம்பிக்கை பிடித்திருந்ததால் அந்த படத்தில் அவர் தொடர்ந்து நடிக்க முடிந்தது. பின்னாளில் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு ஆனதெல்லாம் வரலாறு.