தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் மாலிவுட்…
சமீப காலமாக மலையாள சினிமாக்கள் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு வெளிவந்த “பிரேமலு”, “மஞ்சுமல் பாய்ஸ்” போன்ற திரைப்படங்கள் தமிழகத்தின் சிறு சிறு நகரங்களிலுமே வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் மலையாள சினிமாவுக்கான வணிகம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
அவுங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?
இந்த நிலையில் “ஜமா” திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான பாரி இளவழகன் சமீபத்தில் ஒரு விழாவில் பேசியபோது, “ஒரு மலையாள படம் ஒரு அரை மணி நேரம் ஸ்லோவா போச்சுனா, கதையை செட் பண்றாங்க அதனாலதான் ஸ்லோவா போகுதுனு இங்க உள்ள பார்வையாளர்களே சொல்றாங்க. ஆனால் தமிழ் படம் ஸ்லோவா ஆரம்பிச்சா இது தேறாது, போர் அடிக்குது அது இதுனு பேசி படத்தையே காலி பண்ணிடுறாங்க” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான “ஜமா” திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.