மக்கள் கலைஞர்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் ஜெய்சங்கர். இவர் தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி பாதையில் பயணித்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உயர்ந்தார். உதவி என்று வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்ததால் இவரை மக்கள் கலைஞர் என்றும் அழைப்பது உண்டு.

கண்களால் பறிபோன வாய்ப்பு
நடிகர் ஜெய்சங்கரின் கண்கள் மிக சிறியவை. இவர் ஹீரோவுக்காக வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் இவரது சிறிய கண்களை காரணம் காட்டியே இவருக்கு சினிமாவில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் இயக்குனர் ஜோசஃப் தெலியத் இயக்குவதாக இருந்த ஒரு புதிய திரைப்படத்தில் ஆடிஷனுக்காக சென்றிருந்தார் ஜெய்சங்கர்.

அப்போது ஜெய்சங்கரின் சிறிய கண்களை பார்த்த ஜோசஃப் தெலியத், இது போன்ற சிறிய கண்களை உடைய ஹீரோதான் இந்த கதைக்கு சரியாக வருவார் என்று முடிவு செய்து ஜெய்சங்கரை தனது “இரவும் பகலும்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இவ்வாறு கண்களால் போன வாய்ப்பு மீண்டும் அதே கண்களால் கிடைத்திருக்கிறது.