இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்
இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் கீ போர்டு பிளேயராக பணியாற்றியிருக்கிறார். அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்புயலாக உருவாக, இளையராஜாக்கு அடுத்தபடியான இடத்தை கைப்பற்றினார் ஏ.ஆர்.ரஹ்மான். கோலிவுட் சினிமாவின் உச்சத்தில் இருந்தாலும் இளையராஜாவுக்கு உண்டான மரியாதை எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.
இளையராஜாவை பார்க்க முடியாத இளைஞர்
1990களில் இளையராஜா பிசியான இசையமைப்பாளராக வலம் வந்த போது ஒரு இளைஞர் இளையராஜா இசைக்குழுவில் வாசிக்க வேண்டும் என வெறிகொண்டு அவரை பார்ப்பதற்கு பல முறை முயன்றார். ஒரு நாள் கொட்டும் மழையிலும் இளையராஜாவின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். ஆனாலும் இளையராஜாவை சந்திக்க முடியவில்லை. வாய்ப்புக்காக போராடியும் அமையவில்லை.

உடனே அழைத்த ஏ.ஆர்.ரஹ்மான்
அதன் பின் அந்த இளைஞர் மணிசர்மா மற்றும் ஒரு பிரபல ஹிந்தி இசையமைப்பாளரிடம் பணிக்கு சேர்ந்தார். பல வருடங்கள் கழித்து ஒரு நாள் தனது நண்பர் ஒருவரின் மூலம் அவருக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்திருக்கிறது. “ஏ.ஆர்.ரஹ்மான் உங்களை உடனே வரச்சொன்னார்” என்று கூறியிருக்கிறார். அந்த இளைஞருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

அதன் பின் உடனே சென்று ரஹ்மானை பார்க்க, அவரோ, “நாளையில் இருந்து வேலைக்கு வந்துடுங்க” என்று கூறியிருக்கிறார். அந்த இளைஞர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் “பார்த்தாலே பரவசம்”, “லகான்”,”பாய்ஸ்” போன்ற திரைப்படங்களில் பணியாற்றினார். அதன் பின் அவருக்கு இயக்குனர் ஷங்கர் அலுவலகத்தில் இருந்து வாய்ப்பு வர, அவ்வாறுதான் ஷங்கர் தயாரித்து பாலாஜி சக்திவேல் இயக்கிய “காதல்” திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவரது பெயர்தான் ஜோஷ்வா ஸ்ரீதர்.