லண்டனை அதிரவைத்த இளையராஜா
உலகமே தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த நிகழ்வு ஒன்றை அசாதாரணமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளார் இளையராஜா. லண்டணின் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவிடன் இணைந்து “வேலியண்ட்” என்ற தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றியுள்ள இளையராஜா மொசார்ட், பீத்தோவன் ஆகியோரின் வரிசையில் இணைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியில் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக தனது சிம்பொனியை இசைத்துள்ளார் இளையராஜா. இந்நிகழ்வு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.
முதல் படத்தில் ஏற்பட்ட தடங்கல்கள்
இளையராஜா “அன்னக்கிளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார் என்பது பலரும் அறிந்ததே. ஆனால் அத்திரைப்படத்தின் முதல் பாடலை கம்பொஸ் செய்தபோது தொடர்ந்து ஏற்பட்ட தடங்கல்கள் யாரும் அறியாதது.
இத்திரைப்படத்தின் முதல் பாடலின் ஆர்கெஸ்டிராவை முடித்துவிட்டு அப்பாடலை கேட்க தயாரானபோதுதான் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏதோ ஒரு கவனக்கோளாறால் ரெக்கார்டிங் செய்யக்கூடிய கருவியின் பொத்தானை அவர்கள் On செய்யவில்லையாம். அதனால் பாடல் ரெக்கார்ட் ஆகவில்லை. அதிர்ந்துப்போன இளையராஜா, மீண்டும் கம்போஸ் செய்ய தயாரானபோது 1,2,3 Start என்று கூறியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. “சகுணமே சரியில்லையே” என்ற பேச்சுக்கள் காதில் விழுந்திருக்கிறது.

அதனை தொடர்ந்து கம்போஸிங் முடிந்து பாடல் மிகவும் அருமையாக வந்திருந்தது. எனினும் சிலர் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலத்திடம் வந்து “எல்லாமே அபசகுணமா நடக்குது, வேற மியூசிக் டைரக்டரை போடலாம்” என்று கூறினார்களாம். ஆனால் பஞ்சு அருணாச்சலம் அதற்கெல்லாம் அசரவில்லை. இவ்வாறு பல தடங்கலையும் மீறி இளையராஜா தற்போது உலகமே திரும்பி பார்க்கும் இசையமைப்பாளராக ஜொலித்துள்ளார்.