இசைஞானி
கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தமிழ் இசை ரசிகர்களை கட்டி ஆண்டு வருகிறார் இசைஞானி என்று புகழப்படும் இளையராஜா. இசை என்னும் போதி மரத்தின் கீழ் அவர் ஞானம் பெற்றதாலோ என்னவோ அவரை இசை புத்தர் என்றும் அழைப்பார்கள். இளையராஜாவிற்கு இப்போது 81 வயது ஆகிறது. இந்த வயதிலும் தற்கால தலைமுறைக்கு ஏற்றார் போல் பாடல்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான “விடுதலை 2” திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா இசையில் உருவான “தினம் தினமும்” என்ற பாடல் ரசிகர்களால் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

பாடல் வரிகள் மாற்றம்
1980களில் இளையராஜா மிகவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்தவர். அந்த சமயத்தில் 1985 ஆம் ஆண்டு மோகன், ரேவதி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் “உதய கீதம்”. இளையராஜாவின் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பாடு நிலாவே” என்ற பாடல் குறித்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து பார்க்கலாம்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பாடு நிலாவே” பாடலை எழுதியவர் மு.மேத்தா. இந்த பாடலை மு.மேத்தா எழுதியபோது ரேவதி கதாபாத்திரம் “பாடு நிலாவே” என்று பாடலின் முதல் வரியை பாடுவதாக எழுதியிருந்தார். அதன் பின் மோகன் கதாபாத்திரம் பாடும்போதும் “பாடு நிலாவே” என்ற அதே வரியை எழுதியிருந்தார்.

கதைப்படி இந்த பாடல் காட்சியில் மோகன் ஜெயிலுக்குள்ளே பாடுவது போல் அமைந்திருக்கும். ரேவதி ஜெயிலுக்கு வெளியே பாடுவது போல் அமைந்திருக்கும். ஆதலால் இளையராஜா மேத்தாவிடம் “மோகன் எப்படி பாடு நிலாவே என பாட முடியும். ஜெயிலுக்குள்ள எங்க நிலா வரும்?” என்று கேட்க, அதற்கு மு.மேத்தா “ஜன்னல் வழியா நிலா வரும்ல” என்று பதிலளித்திருக்கிறார்.
“வாதத்திற்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் காட்சியமைப்பிற்கு சரியாக இருக்காது. ஆதலால் மோகன் பாடும் இடத்தில் பாடு நிலாவே என்பதற்கு பதில் பாடும் நிலாவே என்று மாற்றுங்கள், இதுதான் சரியாக இருக்கும்” என கேட்டுக்கொண்டாராம் இளையராஜா. மு.மேத்தாவுக்கும் இது சரி என தோன்ற உடனே மாற்றிக்கொடுத்துள்ளார். இப்பாடல் இப்போதும் ரசிக்கத்தக்க பாடலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.