பல ஆண்டு நட்பு
இளையராஜா பண்ணைபுரத்தில் தனது சகோதரர்களுடன் கச்சேரிகளில் வாசித்து வந்த காலகட்டத்திலேயே பாரதிராஜா இளையராஜாவுடனும் அவரது சகோதரர்களுடனும் நண்பர்களானார். அனைவரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் சென்னைக்கு வந்திறங்கினர். அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறு.

தீடீரென மலர்ந்த நட்பு…
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பாரதிராஜாவின் தம்பியான ஜெயராஜ், பாரதிராஜாவும் இளையராஜா சகோதரர்களும் ஒரே நாளில் நட்பானது குறித்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
பாரதிராஜா சுகாதாரத்துறையில் பணியாற்றியபோது பண்ணைபுரத்திற்கு மாற்றலானாராம். அப்போது பேருந்தில் இருந்து பண்ணைபுரத்திற்கு வந்திறங்கிய பாரதிராஜா வெள்ளை வெளேரென அரைகால் சட்டையும் இடுப்பில் பெல்ட்டுடனும் டிப்டாப்பாக இறங்கினாராம்.

அப்போது அந்த வழியே இளையராஜா தனது சகோதரர்களான பாஸ்கரன், கங்கை அமரன் ஆகியோருடன் நடந்து வந்துகொண்டிருந்தாராம். அப்போது பாரதிராஜா அவர்களை பார்த்து, “நான் ஒரு அரசு அதிகாரி, இங்கே மாற்றலாகி வந்திருக்கிறேன்” என அறிமுகப்படுத்திக்கொண்டாராம். அதன் பின் அன்று மாலையே இளையராஜா, அவரது சகோதரர்கள் ஆகியோருடன் நட்பு மலர்ந்துவிட்டதாம். இளையராஜாவின் அண்ணனான பாஸ்கரனின் தோள் மீது கையை போட்டுக்கொண்டு பேசத் தொடங்கிவிட்டாராம் பாரதிராஜா.