நயன்தாரா-ஆர்ஜே பாலாஜி கூட்டணி
ஆர்ஜே பாலாஜி-என்.ஜே.சரவணன் ஆகியோரின் இயக்கத்தில் நயன்தாரா நடித்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.
இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த அமோக வரவேற்பை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

சுந்தர் சி கைக்குப் போன படம்…
“மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் சுந்தர் சி, ஊர்வசி, துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை ஐசரி கணேஷுடன் இணைந்து நயன்தாரா மற்றும் குஷ்பு ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இத்திரைப்படம் எதனால் சுந்தர் சி கைகளுக்கு சென்றது என்பது குறித்து ஒரு நேயர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கும் ஆர்ஜே பாலாஜிக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தது என பதிலளித்துள்ளார். எனினும் “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவது பெருமைப்படக் கூடிய விஷயம் என்று ஆர்ஜே பாலாஜி ஒரு பேட்டியில் கூறியிருந்ததாக சித்ரா லட்சுமணன் குறிப்பிட்டிருந்தார்.