ஹாரிஸ் மாமா
90’s Kid-களின் மிகவும் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது இசையில் உள்ள தரத்தை பற்றி நாம் தனியாக கூறத் தேவையில்லை. ஏ.ஆர்.ரஹ்மானிற்கு அடுத்த படியாக தமிழ் இசையின் தரத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றவர்களில் முக்கியமான ஒருவராக ஹாரிஸ் ஜெயராஜ் திகழ்ந்து வருகிறார். இவரை 90’s Kid-கள் செல்லமாக ஹாரிஸ் மாமா என்று அழைப்பது உண்டு.
ஹாரிஸ் செய்த மேஜிக்
இந்த நிலையில் பாடகர் கிரிஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது பாடகர் கிரிஷ் அமெரிக்காவில் வசித்தபோது அங்கே பல கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தாராம். அப்போது “வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தின் “வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே” பாடலின் படப்பிடிப்பு அங்கே நடந்துகொண்டிருந்ததாம்.

அந்த படப்பிடிப்பு தளத்தில் ஒரு நண்பரை கிரிஷ் சந்திக்க, “எனக்கு பாடுவதில் அதிக ஈடுபாடு உண்டு” என கூறியிருக்கிறார். அதற்கு அந்த நண்பர், “நீங்கள் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையை தரிசியுங்கள். உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்” என கூறியிருக்கிறார். இவரும் இந்தியா கிளம்பி வந்து சென்னையில் இறங்கியபோது, கணேஷ் குமார் என்ற நபர் கிரிஷின் குரலில் ஒரு பாடலை பதிவு செய்ய அவரை அழைத்திருக்கிறார்.
சரி என்று அப்பாடல் பதிவை முடித்துக்கொண்டு நேராக திருவண்ணாமலைக்கு சென்று காரில் இருந்து இறங்கிய மறு நிமிடம் கணேஷ் குமார் இவருக்கு மொபைலில் தொடர்புகொண்டிருக்கிறார். “உங்களுக்கு ஒரு குட் நியூஸ். ஹாரிஸ் ஜெயராஜ் சார் உங்களது பாட்டை கேட்டார். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. உங்களை நாளை சென்னை வந்து பார்க்க சொல்லியிருக்கிறார்” என்று கூற கிரிஷிற்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லையாம். அண்ணாமலையை கையெடுத்து கும்பிட்டாராம்.
அதன் பிறகுதான் “உன்னாலே உன்னாலே” திரைப்படத்தின் “ஜூன் போனால் ஜூலை காற்றே’” பாடலை பாட கிரிஷிற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. மேலும் கிரிஷ் அமெரிக்காவில் “வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தின் “வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே” பாடல் படப்பிடிப்பை பார்த்தார் அல்லவா. அந்த பாடலையும் ஹரிஹரனுடன் இணைந்து பாட வாய்ப்பு கிடைக்கிறது. இதனை “எனக்கு நடந்த மேஜிக்” என்று சிலாகித்து பேசியுள்ளார் கிரிஷ்.