புரட்சி தலைவி
சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் மாபெரும் ஆளுமையாக திகழ்ந்த ஜெயலலிதா, தமிழக மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்திருப்பவர். மிகவும் சாதுர்யசாலியான ஜெயலலிதா, இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக இரும்பு பெண்மணியாக போற்றப்பட்டவர். குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களின் மனதில் தங்கத் தாரகையாக சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர்.

இளம் வயதில்….
ஜெயலலிதா சினிமாவிற்குள் நுழையும் முன்பே அவரது தாயாரான சந்தியா புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, ஹிந்தி நடிகர் ராஜ் கபூர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது ஜெயலலிதா, தனது பள்ளித் தோழிகளுடன் சென்று அங்குள்ள நடிகர்களிடம் ஆட்டோகிராஃப் பெற்றார். அந்த சமயத்தில் ஜெமினி கணேசனிடம் ஜெயலலிதா தனது பள்ளித் தோழிகளுடன் ஆட்டோகிராஃப் கேட்க, அதற்கு அவர், “ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால்தான் நான் ஆட்டோகிராஃப் போடுவேன்” என்று கூறியிருக்கிறார். இது ஜெயலலிதாவுக்கு வேதனையை கொடுத்திருக்கிறது. ஆனால் ஜெமினி கணேசன் ஆட்டோகிராஃப் போடுவதன் மூலமும் கூட வெள்ள நிவாரண நிதியை திரட்டலாம் என நினைத்துதான் அவ்வாறு கேட்டிருக்கிறார் என பிற்காலத்தில் ஜெயலலிதா புரிந்துகொண்டாராம்.