சிக்கலில் கேம் சேஞ்சர்?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள “கேம் சேஞ்சர்” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆம் தேதி வெளிவர உள்ளது. இதனிடையே “கேம் சேஞ்சர்” திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியிட தடை போட வேண்டும் என லைகா நிறுவனம் தயாரிப்பாளர் கூட்டமைப்பிடம் புகார் அளித்தது.

அதாவது இயக்குனர் ஷங்கர் “இந்தியன் 3” திரைப்படத்தை முடித்துக்கொடுத்துவிட்ட பிறகுதான் அவரது “கேம் சேஞ்சர்” திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட வேண்டும் என அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாது “இந்தியன் 3” திரைப்படத்தை முழுவதுமாக முடித்துக்கொடுக்க இயக்குனர் ஷங்கர் ரூ.65 கோடி கேட்பதாகவும் “இந்தியன் 2” திரைப்படத்தின் தோல்வியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது எனவும் அப்புகாரில் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இது தவிர “இந்தியன் 3” திரைப்படம் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை திரையிட்டு காட்டவேண்டும் எனவும் லைகா நிறுவனம் கூறியிருந்தது.
திடீரென நுழைந்த கமல்ஹாசன்….

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைகா நிறுவனத்திடம் தொடர்புகொண்டு முதலில் “இந்தியன் 3” திரைப்படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு அதன் பின் அன்பறிவ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிப்பதாக வாக்கு கொடுத்துவிட்டாராம். அதே போல் இயக்குனர் ஷங்கரும் “இந்தியன் 3” திரைப்படத்தில் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை திரையிட்டு காட்டுவதாகவும் கூறியுள்ளாராம். இதனால் லைகா நிறுவனம் அப்புகாரை வாபஸ் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் “கேம் சேஞ்சர்” திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாக எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரியவருகிறது.