50 பாடல்கள் கொண்ட திரைப்படங்கள்
தமிழ் சினிமா உருவாக தொடங்கிய காலகட்டத்தில் ஒரு படத்தில் குறைந்தது 50 பாடல்களாவது இடம்பெறும். அந்த காலகட்டத்தில் இருந்த ரசிகர்களுக்கு சினிமாவும் நாடகமும் மட்டும்தான் முதன்மை பொழுதுபோக்கு கலைகளாக இருந்தது. ஆதலால் அக்காலத்து ரசிகர்கள் மிகவும் பொறுமையாக அந்த 50 பாடல்களையும் ரசித்தபடி திரைப்படத்தை பார்த்தனர்.
இந்த போக்கு அதன் பின் 20 பாடல்கள், 10 பாடல்கள் என்று குறைந்துப்போனது. அந்த சமயத்தில் பாடல்களே இல்லாமல் ஹாலிவுட் திரைப்பட பாணியில் ஒரு படத்தை இயக்க முயற்சி நடந்தது.
புதுமை இயக்குனர்
தமிழ் சினிமாவின் கிளாசிக் இயக்குனர்கள் மிகவும் புதுமையான இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.பாலச்சந்தர். இவர் அக்காலகட்டத்தில் ஹாலிவுட்டிற்கு நிகரான பல திரில்லர் திரைப்படங்களை தமிழில் இயக்கியவர். அந்த வகையில் இவர் இயக்கிய திரில்லர் திரைப்படம்தான் “அந்த நாள்”.

1954 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், ஜாவர் சீதாராமன் போன்ற பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் உருவாகும்போதே இத்திரைப்படத்தில் பாடல்கள் எதுவும் இருக்க கூடாது என்று முடிவு செய்துதான் இந்த கதையையே எழுதினார் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர்.
எனினும் இத்திரைப்படத்தை தயாரித்த ஏவி மெய்யப்ப செட்டியார், “ஒரு பாடலாவது இத்திரைப்படத்தில் வைக்கலாமே” என கேட்டிருக்கிறார். அதற்கு எஸ்.பாலச்சந்தர், “ஒன்று இந்த படத்தில் ஆறு பாடல்கள் இருக்க வேண்டும் அல்லது பாடலே இருக்க கூடாது” என்று கூறியிருக்கிறார்.

இதனை புரிந்துகொண்ட ஏவி மெய்யப்ப செட்டியார், பாடல்களே இல்லாமல் இத்திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். எனினும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.