SK 25
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் தனது 25 ஆவது திரைப்படத்தின் டைட்டில் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு “பராசக்தி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் டைட்டில் சிவகார்த்திகேயன் பட டைட்டிலை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் பலரும் Decode செய்து வருகிறார்கள்.

விஜய் ஆண்டனியின் பராசக்தி?
“அருவி” திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு அடுத்ததாக விஜய் ஆண்டனியை வைத்து இயக்க உள்ள திரைப்படத்திற்கு “சக்தி திருமகன்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு “பராசக்தி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
“சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படத்திற்கு பராசக்தி என்று டைட்டில் வைக்க உள்ளதால்தான் தன்னுடைய திரைப்படத்திற்கும் அதே டைட்டிலை வைக்கக்கூடாது என்பதற்காக இயக்குனர் அருண் பிரபு, விஜய் ஆண்டனியை வைத்து தான் இயக்க உள்ள திரைப்படத்திற்கு தமிழில் சக்தித் திருமகன் என்றும் தெலுங்கில் பராசக்தி என்றும் வைத்துள்ளார். ஆதலால் சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படத்தின் டைட்டில் நிச்சயம் பராசக்திதான்” என ரசிகர்கள் Decode செய்து வருகிறார்கள்.

கலைஞர் கருணாநிதி எழுதிய வசனத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த “பராசக்தி” திரைப்படம் புரட்சிகரமான திரைப்படமாக அமைந்தது. சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய கதை என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.