கிளாசிக் திரைப்படம்
1986 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மோகன், கார்த்திக், ரேவதி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மௌன ராகம்”. இத்திரைப்படம் இப்போதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்போது ரசிகர்கள் பலரும் ஆவலோடு பார்ப்பது உண்டு. அந்தளவிற்கு காலத்தை தாண்டியும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

கண்டபடி திட்டிய ரசிகர்
“மௌன ராகம்” திரைப்படத்தில் ரேவதி முதலில் கார்த்திக்கை காதலித்திருப்பார். ஆனால் கார்த்திக் சுட்டுக்கொல்லப்பட ரேவதியின் பெற்றோர் அவரை வற்புறுத்தி மோகனுக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். கார்த்திக்கின் ஞாபகங்களை மனதில் தேக்கி வைத்திருக்கும் ரேவதியால், மோகனை தனது கணவனாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் ஏற்படும். இதன் காரணமாக இருவருக்கும் இடையே ஏற்படும் உறவு சிக்கல்களே இத்திரைப்படத்தின் கதை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் மணிரத்னம், இத்திரைப்படத்தை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “மௌன ராகம்” திரைப்படத்தை சென்னைக்கு வெளியே ஒரு சிற்றூரில் உள்ள திரையரங்கத்திற்கு பார்க்கச் சென்றாராம் மணிரத்னம். திரையரங்கில் முதல் பத்து வரிசைகள் காலியாக இருந்ததாம்.
திரைப்படம் முடிந்த பிற்பாடு ரசிகர் ஒருவர், “என்னடா இது, அந்த பொண்ணுக்கு நாளு அடி போட்டிருந்தா சரியா போயிருக்கும்” என்று கூறினாராம். அதன் பிறகுதான் மணிரத்னம் சிந்தித்தாராம். இந்த படத்தில் மோகன் ரேவதியை அடிப்பது போல் காட்சிப்படுத்திவிட்டு அதன் பின்னர் வன்முறை என்பது இதற்கு தீர்வல்ல என்று இந்த படத்தை முடித்திருக்க வேண்டும் என அப்பேட்டியில் கூறினார்.