விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கௌதம் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களே பெற்று வருகிறது. “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. அதே ஆவலோடு ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர். ஆனால் இரண்டாம் பாகத்தில் புரட்சிகரமான வசனங்க சற்று அதிகமாகவே தென்பட்டதாக ரசிகர்கள் கூறிவந்தனர். அது மட்டுமல்லாது இத்திரைப்படத்தில் டப்பிங் சரியாக இல்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

கம்யூனிஸம்
“விடுதலை”, “விடுதலை 2” ஆகிய திரைப்படங்கள் முழுக்க முழுக்க கம்யூனிச சிந்தனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களாகும். ஆதலால் இடதுசாரிகளின் மத்தியில் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் “விடுதலை” திரைப்படத்தை குறித்த ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
படத்துல மட்டுந்தான் கம்யூனிஸமா?
“விடுதலை 2 திரைப்படம் கம்யூனிஸம் பற்றிதான் பேசியிருக்கிறது. கம்யூனிஸம்னா எல்லாரும் சமம் என்று சொல்லக்கூடிய விஷயம்தான். ஆனால் அப்படி பார்த்தால் இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனருக்கு ஒரு சம்பளம், லைட் மேனுக்கு ஒரு சம்பளம், அங்கிருக்கும் உதவியாளர்களுக்கு ஒரு சம்பளம் என அப்படித்தான் இருக்கிறது.

அனைவரும் உழைப்பை போட்டிருக்கிறார்கள். அதுவும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இரண்டு பேர் இறந்து போயிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் அனைவருக்கும் சமமான சம்பளத்தைதான் கொடுப்பார்களா? இல்லை ஒவ்வொருத்தரின் வேலைக்கு ஏற்ப கொடுப்பார்களா? எல்லாருமே சமம் என்றால் அவர்கள் இதிலேயும் அதனை பின்பற்ற வேண்டும் அல்லவா? அவர்கள் படத்திற்காக மட்டுந்தான் கம்யூனிஸம் பேசுகிறார்களா?” என அந்த ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு சித்ரா லட்சுமணன், “உங்களுடைய இந்த கேள்வியை இயக்குனர் வெற்றிமாறனுக்கு அப்படியே Forward செய்ய விரும்புகிறேன்” என பதில் கூறினார்.