கிளாசிக் திரைப்படம்
ரஜினிகாந்த்-மம்மூட்டி ஆகியோர் இணைந்து நடித்த “தளபதி” திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களால் காலத்தை கடந்தும் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படமாகும். கடந்த வாரம் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு கூட இத்திரைப்படத்தை ரீரிலீஸ் செய்திருந்தனர். இளையராஜாவின் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

இரண்டு கிளைமேக்ஸ்
“தளபதி” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் எதிரிகளால் சுடப்பட்டு மம்மூட்டி கதாபாத்திரம் உயிரிழப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் முதலில் இத்திரைப்படம் படமாக்கப்பட்ட போது ரஜினிகாந்த் கதாபாத்திரம் உயிரிழப்பது போன்றுதான் படமாக்கப்பட்டதாக செய்திகள் உலா வந்தன. படமாக்கப்பட்ட பின் அத்திரைப்படம் வெளிவந்தபோது ரசிகர்களுக்கு அந்த கிளைமேக்ஸ் பிடிக்காமல் போக, மீண்டும் ரீஷூட் செய்யப்பட்டாதாகவும் கூறுவார்கள்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசிய மணிரத்னம் இதனை மறுத்துள்ளார். அதாவது, “தளபதி படத்திற்காக ஒரே ஒரு கிளைமேக்ஸ்தான் நாங்கள் படமாக்கினோம். இரண்டு கிளைமேக்ஸ் என்பது வதந்தி” என்று கூறியிருந்தார். எனினும் இந்த வதந்தியை இப்போதும் பல ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.