இவருக்கு பதில் இவர்
தொலைக்காட்சி தொடர்களில் ஒரு நடிகர் சில காரணங்களால் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து வெளியேறினாலோ அல்லது இறந்துபோனாலோ, அந்த நடிகருக்கு பதில் வேறு ஒரு நடிகரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள். அவ்வாறு அவர்கள் நடிக்க வைக்கும்போது பார்வையாளர்களுக்கு அதனை தெரிவிக்கும் வகையில் இருவரின் புகைப்படங்களையும் அருகருகே காட்டி, “இனி இவருக்கு பதில் இவர்” என்று காட்டுவது வழக்கம். இந்த வழக்கத்தை தமிழ் சினிமாவில் கடைப்பிடித்து இருக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் “இவருக்கு பதில் இவர்” என்று அவர்கள் காட்டவில்லை, அவ்வளவுதான்.
பத்ரகாளி

1976 ஆம் ஆண்டு சிவகுமார், ராணி சந்திரா ஆகியோரின் நடிப்பில் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “பத்ரகாளி”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்திருந்த நிலையில் ஒரு நாள் இதில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த ராணி சந்திரா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய்க்கு சென்றிருந்தார். அவர் மீண்டும் சென்னை திரும்பியபோது விமான விபத்தில் இறந்துபோனார்.

இந்த நிலையில் ராணி சந்திராவுக்கு பதில் அவரை போலவே முக ஒற்றுமை கொண்ட புஷ்பா என்ற நடிகையை நடிக்க வைத்தார்களாம். மீதமுள்ள 40% காட்சிகளையும் புஷ்பாவை வைத்தே படமாக்கியிருக்கிறார்கள். இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.