காலத்துக்கும் அழியாத திரைப்படம்…
1958 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி ஆகியோரின் நடிப்பில் எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “வஞ்சிக்கோட்டை வாலிபன்”. இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் கிளாசிக் திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்ணும் கண்ணும் கலந்து” என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.

பத்மினி VS வைஜெயந்தி மாலா
இந்த பாடலில் பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் போட்டி போட்டு நடனமாடுவார்கள். கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த பாடலில் இருவருக்குமான போட்டியில் யார் வெல்வார்கள் என்பதுதான் மிகவும் ஆவலைத் தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தை தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி மொழி ரசிகர்களும் காண்பார்கள் என்று எஸ்.எஸ்.வாசன் நினைத்தாராம்.

ஏனென்றால் வைஜெயந்தி மாலா ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். அதே போல் ஒரு பக்கம் பத்மினி தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்த பாடலில் இடம்பெறும் நடனப்போட்டியில் பத்மினி தோற்றால் தமிழ் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள், வைஜெயந்தி மாலா தோற்றால் ஹிந்தி ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று கணக்கு போட்ட எஸ்.எஸ்.வாசன் இரு மொழி ரசிகர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என முடிவு செய்தாராம்.
இயக்குனருக்கு வந்த திடீர் யோசனை..
அப்போது எஸ்.எஸ்.வாசனுக்கு ஒரு யோசனை வந்ததாம். அதாவது இந்த நடனப் போட்டியில் இருவரில் யார் வெல்வார்கள் என்ற முடிவு இல்லாமல் இந்த பாடலை முடித்துவிட வேண்டும் என ஒரு யோசனைக்கு வந்தாராம். அதன் படி இந்த பாடலில் வைஜெயந்தி மாலா வெல்வாரா அல்லது பத்மினி வெல்வாரா என்பது தெரியாதது போலவே இந்த பாடல் காட்சியை முடித்திருப்பாராம் எஸ்.எஸ்.வாசன்.