கதை திருட்டு
சினிமாத்துறையை பொறுத்தவரை கதை திருட்டு என்பது பல வருடங்களாகவே நிகழ்ந்து வரும் ஒன்று. சமீப காலமாக, “கத்தி”, “சர்க்கார்” என சர்ச்சைக்குள் சிக்கிய பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வகையில் இந்த சர்ச்சையில் தற்போது “சப்தம்” திரைப்படமும் சிக்கியுள்ளது.

வித்தியாசமான ஹாரர்
ஆதியின் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ஹாரர் திரைப்படம் “சப்தம்”. ஒலியை மையமாக வைத்து ஒரு அமானுஷ்ய திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது.
இது என்னுடைய கதை…
இந்த நிலையில் சலீம் பாட்ஷா என்ற இயக்குனர் “சப்தம்” திரைப்படத்தின் கதை என்னுடையது என முறையிட்டுள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஆதிக்கு சலீம் பாட்ஷா தான் எழுதிய Script ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் பின் அந்த Script-ஐ முழுவதுமாக கூறும்படி கேட்டுள்ளார் ஆதி.
அதன் படி சலீம், முழுக்கதையையும் ஆடியோவில் பதிவு செய்து ஆதிக்கு அனுப்பினாராம். தான் கூறிய கதையே தற்போது சப்தம் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சலீம் பாட்ஷா.

மேலும் அந்த அறிக்கையில், “நான் ஆதியை மிகவும் நம்பினேன். நான் பணத்திற்காக இந்த அறிக்கையை வெளியிடவில்லை. திரைத்துறையில் இயக்குனராக ஆக விரும்புபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் எவரையும் நம்பி என்னைப்போல் கதை கூறி ஏமாந்துவிடாதீர்கள் என கூறுவதற்குதான் இந்த அறிக்கை” என அதில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.