வணங்கான்
இயக்குனர் பாலா இயக்கி அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வணங்கான்”. இத்திரைப்படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட சூர்யா “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு அருண் விஜய் நடிப்பில் இத்திரைப்படம் உருவானது. இதில் அருண் விஜய்யுடன் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதா ரவி, சிங்கம்புலி, ரோஷினி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது.

பாலா 25
இதனிடையே இயக்குனர் பாலா தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராய் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் அவரை சிறப்பிக்கும் வகையில் சமீபத்தில் “பாலா 25” என்ற விழா நடைபெற்றது. இதில் “வணங்கான்” திரைப்பட குழுவினர் மற்றும் சூர்யா, மணிரத்னம், சிவகுமார் போன்ற திரையுலகைச் சேர்ந்த பல இயக்குனர்களும் நடிகர்களும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நடிகர் சிவகுமார் பாலாவிடம் பேட்டி எடுப்பது போல் சில கேள்விகளை கேட்டார்.

அதில், “நான் உயிரை கொடுத்து நடனமாடிய தகதகவென ஆடவா பாடலை பிதாமகனில் கேலி செய்து பாழிவாங்கிட்டியேடா? மனசை தொட்டு சொல்லு, எதுக்காக அப்படி பண்ண? என்னை மானபங்கப்படுத்தனும்ன்னு பண்ணியா?” என சிவகுமார் கேட்க, அதற்கு பாலா, “அந்த பாடலில் உங்களது ஆட்டமும் உங்களுடன் நடனமாடியவர்களின் ஆட்டமும் நகைச்சுவையாக இருந்தது. அதனால்தான்” என கூற அரங்கமே சிரிப்பலையில் குலுங்கியது. சிவகுமாரின் நகைச்சுவை தொனியில், “அடப்பாவி, உலகமே பாராட்டுன பாட்டு உனக்கு நகைச்சுவையாக இருந்ததா?” என கூறினார்.