ஏமாற்றம் அளித்த கங்குவா
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் “கங்குவா”. இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தபோதே இத்திரைப்படம் ஒரு Fantasy திரைப்படம் என்ற தகவல் பரவியதால் ரசிகர்களின் ஆர்வம் இரட்டிப்பானது. ஆனால் இத்திரைப்படம் வெளிவந்தபோது இதன் மீது கடுமையான விமர்சனங்கள் குவிந்தன. ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ஏமாற்றத்தை கொடுத்தது.

யூட்யூபர்ஸ் யாரும் வரக்கூடாது
இத்திரைப்படத்திற்கு கிடைத்த சுமாரான வரவேற்பை தொடர்ந்து பலரும் “சூர்யாவின் மேல் உள்ள தனிப்பட்ட காழ்ப்பு காரணமாகவே இத்திரைப்படத்தை குறை சொல்கிறார்கள்” என்ற கருத்துகள் நிலவி வந்தன. மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம், “திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்களை யூட்யூப் சேன்னல்கள் சூழ்ந்து விடுகின்றன. இதனால் மோசமான விமர்சனங்களே முதலில் சென்று சேர்கிறது. இதை முதலில் தடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
பொங்கி எழுந்த அமீர்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர், “ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியினரோ கங்குவா திரைப்படத்தை வீழ்த்த வேண்டும் என்று நினைத்திருக்கும் பட்சத்தில் பக்கத்து மாநிலங்களில் இத்திரைப்படம் வெற்றியடைந்திருக்க வேண்டுமே. யூட்யூபர்களை திரையரங்கு வளாகத்திற்குள் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்க நீங்கள் யார்.

ஒரு பொருளை எடுத்து சந்தையில் வைத்துவிட்டீர்கள். என்றைக்கு ஒரு படைப்பு பார்வையாளர்கள் முன் வந்துவிட்டதோ விமர்சனங்கள் வரத்தான் செய்யும். படத்தின் புரொமோஷனுக்கு மட்டும் பத்திரிக்கையாளர்களை அழைக்கிறீர்கள். ஆனால் படம் பார்த்துவிட்டு கருத்து சொல்லக்கூடாது என்றால் எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.