கிடப்பில் கிடக்கும் படம்
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்த இத்திரைப்படத்தில் ரீத்து வர்மா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இதில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், விநாயகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொருளாதார சிக்கல்களாலும் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மாற்றம் அடிக்கடி நிகழ்ந்ததாலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டு விட்டு நடந்தது. மேலும் பொருளாதார சிக்கலால் இத்திரைப்படம் அப்படியே முடங்கிப்போனது.
போராட்டத்திற்கு கிடைத்த தீர்வு
இத்திரைப்படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என பல ஆண்டுகளாக கௌதம் மேனன் முயன்று வருகிறார். இதற்கிடையில் 12 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்த “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தையும் வெளியிட வேண்டும் என்ற முயற்சியால் கௌதம் மேனன், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியத்தை சென்று சந்தித்தாராம்.

“துருவ நட்சத்திரம்” திரைப்படத்தை பார்த்த திருப்பூர் சுப்ரமணியம், “படம் சிறப்பாக இருக்கிறது” என பாராட்டினாராம். இந்த நிலையில் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி இத்திரைப்படத்தை வெளியிடலாம் என நம்பிக்கை கொடுத்திருக்கிறாராம் திருப்பூர் சுப்ரமணியம்.