இட்லி கடை
“ராயன்” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தனுஷிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும் அதன் பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்த உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது.

உண்மை நிலவரம்
அதாவது “இட்லி கடை” திரைப்படத்திற்காக ஒரு வீடு தீப்பிடித்து எரிவது போன்றும் அந்த சமயத்தில் தனுஷ் அந்த எரிகிற வீட்டிற்குள் புகுந்து எதையோ தேடுவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம். தனுஷிற்கு புகை என்றாலே உடம்புக்கு ஆகாதாம். ஆதலால் படக்குழுவினர் இந்த காட்சியை டூப் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என கூறியிருக்கின்றனர். ஆனால் தனுஷோ “நானேதான் நடிப்பேன்” என்று அடம்பிடித்திருக்கிறார்.
அதன் படி அந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது கரும்புகை அதிகமானதால் தனுஷிற்கு சற்று சுவாசக்கோளாறு ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி அவரது உடல் நிலை சீராகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.