CWC புகழ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானவர் புகழ். இவர் அதற்கு முன்பே விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு”, “KPY Champions” போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்டவர். இவரது நகைச்சுவைக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து “சிக்ஸர்” என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து “தாதா 87”, “கைதி”, “காக்டெயில்”, “சபாபதி” போன்ற பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த புகழ், “அயோத்தி” திரைப்படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களின் மனதில் பதிவானார். இதனை தொடர்ந்து “மிஸ்டர் ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஓம் காளி ஜெய் காளி
நடிகர் விமல் “ஓம் காளி ஜெய் காளி” என்ற வெப் சீரீஸில் நடித்துள்ளார். இதில் விமலுடன் பாவனி, புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த வெப் சீரீஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிலையில் இந்த வெப்சீரீஸிற்கான புரொமோஷன் பேட்டி ஒன்றில் வெப் சீரீஸ் குழுவினர் கலந்துகொண்டனர்.

சினிமாவில் பாலிட்டிக்ஸ்?
இந்த நிலையில் அப்பேட்டியில் நிருபர் புகழிடம், “நீங்கள் முன்னணி நாயகனாகவும் சில திரைப்படங்களில் நடிக்கிறீர்கள். சினிமாவிற்குள் இருக்கும் அரசியலால் உங்களுக்கு பாதிப்பு வந்துள்ளதா?” என கேட்டார்.

அதற்கு புகழ், “பாலிட்டிக்ஸை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. நான் உழைக்கிறேன். கடவுள் எனக்காக சில விஷயங்கள் செய்கிறார். நான் போய்க்கொண்டே இருக்கிறேன். நமக்கான ஒரு இடம் வரும்வரை நாம் ஓடுவோம்” என பதிலளித்தார். புகழ் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் அவரை பலரும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.