அதான்டா இதான்டா…
“அருணாச்சலம்” திரைப்படம் ரஜினிகாந்தின் கெரியரில் மிக முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். ரஜினிகாந்தே இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். 1997 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரஜினிகாந்த் இதுவரை நடித்ததில் மிகவும் வித்தியாசமான நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான திரைப்படமாக அமைந்தது.

கோபப்பட்டு கத்திய வசனக்கர்த்தா…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுந்தர் சி, வசனக்கர்த்தா கிரேஸி மோகன் கோபப்பட்டது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “அருணாச்சலம் திரைப்படத்தை கொஞ்சம் நகைச்சுவை கலந்து திரைப்படமாக கொண்டு செல்லலாம் என ரஜினிகாந்திடம் பேசியபோது அவர் கிரேஸி மோகனை வசனக்கர்த்தாவாக பரிந்துரை செய்தார். நான் கிரேஸி மோகனின் ரசிகன்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் படத்திற்கான வசனங்களை இருவரும் சேர்ந்து உரையாடி எழுதினோம். ஆனால் ஒரு நாள் ரஜினிகாந்த் எங்கள் இருவரையும் அழைத்து ‘சில காரணங்களால் என்னால் இப்போது நடிக்க முடியாது. சில நாட்கள் போகட்டும், அதன் பின் நடிக்கிறேன் என கூறிவிட்டார். வெளியே வந்த பிறகு கிரேஸி மோகன், ‘என்ன சார், ரெண்டு மாசம் உக்கார்ந்து வேலை பார்த்து படார்னு நடிக்கலைனு சொல்லிட்டாரு, என்ன சார் நினைச்சிட்டு இருக்காரு’ என பயங்கர கடுப்பில் பேசினார். அப்போதுதான் அவர் முதல்முறை கோபப்பட்டதை பார்த்தேன்” என கிரேஸி மோகன் கோபப்பட்ட சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.