லோகேஷ்-ரஜினி கூட்டணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு இத்திரைப்படத்தின் அட்டகாசமான புரொமோ வெளிவந்தது. அதில் இடம்பெற்றிருந்த டிஸ்கோ பாடல் ரசிகர்களால் அதிகளவு வரவேற்பை பெற்றது.

அது என்னோட பாட்டுதான்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பாடகரும் இசையமைப்பாளருமான சாய் அப்யங்கர், “கூலி புரொமோவில் இடம்பெற்ற டிஸ்கோ பாடலை நான் தான் இசையமைத்தேன். அந்த பாடல் சிறப்பாக அமைந்ததற்கு அனிருத் என்னை வாழ்த்தினார். வீட்டில் சுத்தி போட சொல்லுங்க என்று சொன்னார்” என கூறியுள்ளார்.

“கட்சி சேர” என்ற ஆல்பம் பாடல் மூலம் பிரபலமாக அறியப்படவர் சாய் அப்யங்கர். அதனை தொடர்ந்து “ஆச கூட” என்ற பாடலும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்த நிலையில் இவரது “சித்திர புத்திரி” என்ற ஆல்பம் வருகிற 31 ஆம் தேதி வெளிவர உள்ளது. மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் “பென்ஸ்” திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதே போல் சூர்யா நடிக்கும் 45 ஆவது திரைப்படத்திற்கும் சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார்.