துயர சம்பவம்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மீண்டும் மீண்டும் சிரிப்பு” என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் ரசிகர்களிடையே அறியப்பட்டவர் நடிகை ஷோபனா. அதனை தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்த ஷோபனா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற நடிகர்களுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடிக்கத் தொடங்கினார் ஷோபனா. “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வயிற்றுவழி தாங்க முடியாமல் ஷோபனா தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கைமாறிப்போன பட வாய்ப்பு
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஷோபனாவின் சகோதரியான ஆனந்தி, “காஞ்சனா” திரைப்படத்தின் வாய்ப்பு கைமாறிப்போன சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “காஞ்சனா” திரைப்படத்தில் தேவதர்ஷினி கதாபாத்திரத்தில் முதலில் தேர்வானர் ஷோபனா என்று கூறியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ், “காஞ்சனா” திரைப்படத்தில் தேவதர்ஷினி கதாபாத்திரத்திற்கு முதலில் ஷோபனாவைதான் தேர்வு செய்திருந்தாராம். ஆனால் ஷோபனாவுக்கு அந்த சமயத்தில்தான் உடல் நிலை சரியில்லாமல் போகத் தொடங்கியதாம். ஆதலால் அந்த படத்தில் இருந்தே அவரே விலகிக்கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியபோது, ஷோபனா தீவிர முருக பக்தர் என்பதால் அடிக்கடி தீவிர விரதம் எடுக்கும் வழக்கம் ஒன்றை வைத்திருந்தார். அதனால்தான் அவருக்கு தீவிர வயிற்று வலி ஏற்பட்டது எனவும் ஆனந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.