IMDb-ஐ பார்த்துட்டுத்தான் படம் பார்ப்போம்…
சமீப காலமாகவே ஒரு படத்திற்கான விமர்சனங்களையும் ரேட்டிங்கையும் பார்த்துவிட்டுத்தான் படத்திற்கு போகவேண்டுமா? வேண்டாமா? என்பதை சினிமா ரசிகர்கள் முடிவு செய்கிறார்கள். இதில் IMDb என்ற வெப்சைட் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது.

அதாவது The Internet Movie Database (IMDb) என்ற இந்த வெப்சைட்டின் மூலம் உலகளவில் உள்ள திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாது IMDb வெப்சைட்டில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் அத்திரைப்படங்களை பரிந்துரை செய்யும் வழக்கமும் சினிமா ரசிகர்களிடம் உண்டு.
வெற்றிக்கும் IMDbக்கும் சம்பந்தம் உண்டா?
இந்த நிலையில் நேயர் ஒருவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், “ஒரு படத்தினுடைய வெற்றிக்கும் IMDb ரேட்டிங்கிற்கும் எதாவது சம்மந்தம் உண்டா? உதாரணத்திற்கு மதகஜராஜா திரைப்படத்தினுடைய IMDb ரேட்டிங் 10க்கு 5.6 தான் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் விடுதலை பார்ட் 2 படத்தின் IMDb ரேட்டிங் 8, ஆனால் படம் சரியாக போகவில்லை என்று கூறுகிறார்கள். எதனால் இந்த முரண்?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு சித்ரா லட்சுமணன், “ஒரு படத்தின் வெற்றிக்கும் IMDb ரேட்டிங்கிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதனை பல திரைப்படங்கள் ஏற்கனவே நிரூபித்து இருக்கின்றன” என்று பதிலளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “இவை எல்லாவற்றையும் தாண்டி இப்போது IMDb ரேட்டிங்கை பொறுத்தவரையில் அதுவும் விலை கொடுத்து வாங்கப்படுவதாக கூறுகிறார்கள், அதுவும் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை” என அந்த வீடியோவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.